கண் திருஷ்டிகள், பில்லி, சூனியம் நீங்க படிக்க வேண்டிய பதிகங்கள்

கண் திருஷ்டிகள், பில்லி, சூனியம் நீங்க படிக்க வேண்டிய பதிகங்கள் | Padhigams to remove evil eyes

கண் திருஷ்டிகள், பில்லி, சூனியம் நீங்க படிக்க வேண்டிய பதிகங்கள் | Padhigams to remove evil eyes

பதிகம் 1

நனவிலும் கனவிலும் நாளும் தன்னொளி
நினைவிலும் எனக்குவந் தெய்து நின்மலன்
கனைகடல் வையகம் தொழுக ருக்குடி
அனலெரி யாடுமெம் அடிகள் காண்மினே

வேதியன் விடையுடை விமலன் ஒன்னலர்
மூதெயில் எரியெழ முனிந்த முக்கணன்
காதியல் குழையினன் கருக்கு டியமர்
ஆதியை அடிதொழ அல்ல லில்லையே

மஞ்சுறு பொழில்வள மலிக ருக்குடி
நஞ்சுறு திருமிட றுடைய நாதனார்
அஞ்சுரும் பார்குழல் அரிவை அஞ்சவே
வெஞ்சுரந் தனில்விளை யாடல் என்கொலோ

ஊனுடைப் பிறவியை அறுக்க உன்னுவீர்
கானிடை யாடலான் பயில்க ருக்குடிக்
கோனுயர் கோயிலை வணங்கி வைகலும்
வானவர் தொழுகழல் வாழ்த்தி வாழ்மினே

சூடுவர் சடையிடைக் கங்கை நங்கையைக்
கூடுவர் உலகிடை ஐயங் கொண்டொலி
பாடுவர் இசைபறை கொட்ட நட்டிருள்
ஆடுவர் கருக்குடி அண்ணல் வண்ணமே

இன்புடை யாரிசை வீணை பூணரா
என்புடை யாரெழின் மேனி மேலெரி
முன்புடை யார்முதல் ஏத்தும் அன்பருக்
கன்புடை யார்கருக் குடியெம் அண்ணலே

காலமும் ஞாயிறுந் தீயும் ஆயவர்
கோலமும் முடியர வணிந்த கொள்கையர்
சீலமும் உடையவர் திருக்க ருக்குடிச்
சாலவும் இனிதவ ருடைய தன்மையே

எறிகடல் புடைதழு விலங்கை மன்னனை
முறிபட வரையிடை யடர்த்த மூர்த்தியார்
கறைபடு பொழின்மதி தவழ்க ருக்குடி
அறிவொடு தொழுமவர் ஆள்வர் நன்மையே

பூமனுந் திசைமுகன் றானும் பொற்பமர்
வாமனன் அறிகிலா வண்ண மோங்கெரி
ஆமென வுயர்ந்தவன் அணிக ருக்குடி
நாமன னினில்வர நினைதல் நன்மையே

சாக்கியர் சமண்படு கையர் பொய்ம்மொழி
ஆக்கிய வுரைகொளேல் அருந்தி ருந்நமக்
காக்கிய அரனுறை அணிக ருக்குடிப்
பூக்கமழ் கோயிலே புடைபட் டுய்ம்மினே

கானலில் விரைமலர் விம்மு காழியான்
வானவன் கருக்குடி மைந்தன் றன்னொளி
ஆனமெய்ஞ் ஞானசம் பந்தன் சொல்லிய
ஊனமில் மொழிவலார்க் குயரு மின்பமே

பதிகம் 2
மாதோர் கூறுகந் தேற தேறிய
ஆதியா னுறை ஆடானை
போதினாற் புனைந் தேத்து வார்தமை
வாதியா வினை மாயுமே. 01

வாடல் வெண்டலை அங்கை யேந்திநின்
றாடலா னுறை ஆடானை
தோடுலா மலர் தூவிக் கைதொழ
வீடும் நுங்கள் வினைகளே. 02

மங்கை கூறினன் மான்ம றியுடை
அங்கை யானுறை ஆடானை
தங்கை யாற்றொழு தேத்த வல்லவர்
மங்கு நோய்பிணி மாயுமே. 03

சுண்ண நீறணி மார்பிற் றோல்புனை
அண்ண லானுறை ஆடானை
வண்ண மாமலர் தூவிக் கைதொழ
எண்ணு வாரிடர் ஏகுமே. 04

கொய்ய ணிம்மலர்க் கொன்றை சூடிய
ஐயன் மேவிய ஆடானை
கைய ணிம்மல ரால்வ ணங்கிட
வெய்ய வல்வினை வீடுமே. 05

வானி ளம்மதி மல்கு வார்சடை
ஆனஞ் சாடலன் ஆடானை
தேன ணிம்மலர் சேர்த்த முன்செய்த
ஊன முள்ள வொழியுமே. 06

துலங்கு வெண்மழு வேந்திச் சூழ்சடை
அலங்க லானுறை ஆடானை
நலங்கொள் மாமலர் தூவி நாடொறும்
வலங்கொள் வார்வினை மாயுமே. 07

வெந்த நீறணி மார்பிற் றோல்புனை
அந்த மில்லவன் ஆடானை
கந்த மாமலர் தூவிக் கைதொழுஞ்
சிந்தை யார்வினை தேயுமே. 08

மறைவல் லாரொடு வான வர்தொழு
தறையுந் தண்புனல் ஆடானை
உறையும் ஈசனை யேத்தத் தீவினை
பறையும் நல்வினை பற்றுமே. 09

மாய னும்மல ரானுங் கைதொழ
ஆய அந்தணன் ஆடானை
தூய மாமலர் தூவிக் கைதொழ
தீய வல்வினை தீருமே. 10
வீடி னார்மலி வேங்க டத்துநின்
றாட லானுறை ஆடானை
நாடி ஞானசம் பந்தன் செந்தமிழ்
பாட நோய்பிணி பாறுமே. 11